வீர சாவர்க்கர் மோசமாக விமர்சிக்கப்படுவது வேதனை அளிக்கிறது - நிதின் கட்காரி பேச்சு

வீர சாவர்க்கர் மோசமாக விமர்சிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

Update: 2020-03-02 07:57 GMT
மும்பை, 

நாக்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்.எஸ்.எஸ். மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் குறித்து மக்களிடம் ஒரு காலத்தில் நல்ல கருத்து இல்லாமல் இருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் அந்த கருத்தை மாற்றி அமைத்தனர்.

எதிர்மறை கருத்துக்களை மாற்ற ஒருவர் தனது எதிரிகளுடன் உரையாட வேண்டியது அவசியம். நாம் அனைவரும் வீர சாவர்க்கரை பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். யாராவது அவரைப் பற்றி மோசமாக பேசும்போது, நான் மிகவும் வேதனைப்படுகிறேன். நான் ஒரு முறை வீர சாவர்க்கரைப் பற்றி மோசமாக விமர்சித்த ஒரு பெரிய அரசியல் தலைவரை சந்தித்தேன். ஒரு அரசியல்வாதியாக நீங்கள் விரும்பியதை செய்யுங்கள். ஆனால் வீர சாவர்க்கரைப் பற்றி இதுபோன்ற விஷயங்களை சொல்ல வேண்டாம் என்று கூறினேன்.

அவரிடம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வீர சாவர்க்கரை பற்றி படியுங்கள். பின்னர் எதிர்ப்பு தெரிவியுங்கள் என்று கூறினேன். நீங்கள் ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டரா? என்று அவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான் ஆம் என்று சொன்னேன். இதற்கு அவர், நீங்கள் நல்லவர் என்று கூறினார். நான் அவரிடம், நான் நல்லவன் என்றால் ஆர்.எஸ்.எஸ். கூட நல்லது தான். வீர சாவர்க்கரும் நல்லவர் தான். வீர சாவர்க்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். மோசமானது என்றால் நானும் மோசமானவன் தான் என்றேன்.

நாம் நமது எதிரிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்து அவர்களிடம் உண்மையை சரியாக சொன்னால், நாம் அவர்களின் இதயங்களை மாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிதின் கட்காரி தனது பேச்சில் யாரையும் பெயரை குறிப்பிட்டு பேசாவிட்டாலும், வீர சாவர்க்கருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தான் அவர் சுட்டி காட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்