பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்ட அமர்வு நாளை (மார்ச் 02) கூடுகிறது.

Update: 2020-03-01 16:22 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

ஜனவரி 31-ல் தொடங்கிய  நாடாளுமன்ற முதற்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெற்றது.  ஜனவரி 31-ல் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

இந்நிலையில்  கூட்டத் தொடரின் 2 வது பகுதியாக மார்ச் 2-ம் தேதி நாளை மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. ஏப்ரல் 3-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

டெல்லி கலவரத்திற்கு பிறகு கூடும் கூட்டம் என்பதால் இரு அவைகளிலும் இந்த பிரச்சினை அமளியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி கலவரத்திற்கு உள்துறை மந்திரி அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள சூழ்நிலையில் கடும் அமளியில் ஈடுபட காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

டெல்லி கலவரம் மட்டுமின்றி நாட்டில் நிலவும் பொருளாதார பின்னடைவு குறித்தும் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது.

மேலும் செய்திகள்