எண்ணெய் இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை -மத்திய மந்திரி

எண்ணெய் இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Update: 2020-01-09 11:11 GMT
புதுடெல்லி,

ஈரான் - அமெரிக்க பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவினங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கச்சா எண்ணெய்க்காக இந்தியா சுமார் 51,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் பெரும்பகுதி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே பெறப்படுகிறது. இந்நிலையில் ஈரான் மீதான தாக்குதலால் உலகளாவிய அளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாய் விலை 72 டாலரைத் தொட்டுள்ளது.

இந்தியா, அதன் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. குறிப்பாக ஈராக்கிடமிருந்தே அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. இந்தியா, 2018-19 நிதி ஆண்டில் 207.3 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது. அதில் 46.61 மில்லியன் டன் ஈராக்கிடமிருந்து வாங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஈரான் - அமெரிக்கா இடையே போர்ச்சூழல் வலுப்பெற்று வருவதால் இந்தியாவுக்கான எண்ணெய்த் தேவை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் கடந்த 8 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.77 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.72.85ஆகவும் உள்ளது. 

டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயருமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியா தயாராகி வருகிறது. தற்போதைய நிலையில் எண்ணெய் இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்