வெங்காயம் விலை படிப்படியாக குறைந்து வருகிறது - நிர்மலா சீதாராமன் பேட்டி
வெங்காயம் விலை பல இடங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலை, ஜிஎஸ்டி, அந்நிய முதலீடுகள், வங்கிகளின் நிதிச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிப்பதற்கான அரசு தரப்பு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியன், வருவாய்த் துறை செயலாளர் அஜய் பூஷண் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சில இடங்களில் ஏற்பட்ட மழையாலும், சில இடங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் வெங்காயம் உற்பத்தி செய்வது பாதிக்கப்பட்டது. வெங்காயம் விலை பல இடங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. வெங்காயத்தை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொடர்ந்து மத்திய அரசை ‘ரேப் இன் இந்தியா’ என்று விமர்சனம் செய்த ராகுல் காந்தியின் கருத்தை வன்மையாகக் கண்டித்த அவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான ராகுல் காந்தியே பெண்களின் புனிதத் தன்மையை மறந்து இவ்வாறு விமர்சிப்பது அவமானத்துக்குரியது என்று கூறினார்.
மேலும், கடன் வழங்கும் சேவையை மேம்படுத்துவதற்காக அரசு தரப்பிலிருந்து ரூ.4.47 லட்சம் கோடி மூலதன உதவி வழங்கியதாகவும், கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ.7,657 கோடிக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.