சித்தராமையா மருத்துவமனையில் சிகிச்சை: கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார்.

Update: 2019-12-12 16:17 GMT
பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா கர்நாடகத்தில் நடந்த 15 தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நேற்று காலை 6.30 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு பசவேஸ்வரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிக ரத்த அழுத்தம் மற்றும் உடல் பரிசோதனை நடைபெற்றது. முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்ட சித்தராமையாவுக்கு அடுத்தடுத்து இதயத்தில் வலி ஏற்பட்டது. இதையடுத்து மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக அவரது மகன் கூறினார்.

இந்நிலையில் நெஞ்சுவலி காரணமாக  பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா  மற்றும் அம்மாநில மந்திரிகள் கே.எஸ். ஈஸ்வரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் மருத்துவமனைக்கு  நேரில் சந்தித்து  உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

மேலும் செய்திகள்