இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2019-12-10 07:25 GMT
புதுடெல்லி

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத  பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.

இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால்,  மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

நாடாளுமன்றத்தில் நேற்று இரவு குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கான உரிமை குறித்து முக்கிய வேண்டுகோளை முன்வைத்துள்ளார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இந்தியாவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்