நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறது; குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை கிழித்து எறிந்த ஓவைசி
நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறது என கூறி மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை ஓவைசி ஆவேசமுடன் கிழித்து எறிந்துள்ளார்.
புதுடெல்லி,
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.
இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆனது. ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மக்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது . கேள்வி நேரத்துக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.
மசோதாவை அறிமுகம் செய்ய 293 பேர் ஆதரவும், 82 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதன்பின் பிற்பகலில் மசோதா மீதான விவாதம் நடந்தது. இந்நிலையில், மக்களவையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி, திடீரென ஆவேசமுடன் எழுந்து பேசும்பொழுது, இந்திய அரசியல் சாசன அமர்வுக்கு இந்த மசோதா எதிரானது. நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அவமரியாதை செய்கிறது. நமது நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கும் இதனை நான் கிழிக்கிறேன் என்று கூறி மசோதா நகலை கிழித்து வீசினார்.