உன்னாவ் வழக்கில் இளம்பெண் எரித்து கொல்லப்பட்டதை கண்டித்து அகிலேஷ் யாதவ் தர்ணா போராட்டம்
உன்னாவ் வழக்கில் இளம்பெண் எரித்து கொல்லப்பட்டதை கண்டித்து உ.பி.முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
லக்னோ,
உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண் எரித்து கொல்லப்பட்டதை கண்டித்து உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் லக்னோவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
உன்னாவ் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமாஜ்வாதி கட்சியினருடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ள அகிலேஷ் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.
உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண்ணை எரித்து கொன்றது மிகவும் கண்டிக்கத்தக்கது. இன்றைய தினம் ஒரு கறுப்பு தினமாகும். இது போன்ற சம்பவங்கள் பாஜக ஆட்சியில் நடைபெறுவது முதல் முறை அல்ல.
யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஒரு மகளின் உயிரை கூட காப்பாற்ற முடியவில்லை. உத்தரபிரதேச முதல்-மந்திரி, மாநில உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் ராஜினாமா செய்யாத வரை நமக்கு நீதி கிடைக்காது. உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சி சார்பில் நாளை அனைத்து மாவட்டங்களிலும் இரங்கல் கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.