1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ராஜீவ் காந்தியை காப்பாற்ற மன்மோகன்சிங் முயற்சிக்கிறார் - சுக்பீர் சிங் பாதல்

1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக பழியை நரசிம்மராவ் மீது போட்டு ராஜீவ் காந்தியை காப்பாற்ற மன்மோகன்சிங் முயற்சிக்கிறார் என்று சுக்பீர் சிங் பாதல் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-12-06 06:54 GMT
புதுடெல்லி,

1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் நடந்த போது உள்துறை மந்திரியாக இருந்த நரசிம்ம ராவை, ஐ.கே.குஜ்ரால் சந்தித்தார். அப்போது, நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. விரைவாக ராணுவத்தை அழைக்க வேண்டியது கட்டாயம் என ஐ.கே.குஜ்ரால் அறிவுரை கூறினார். அந்த அறிவுரை ஏற்கப்பட்டிருந்தால் 1984 ல் நடந்த படுகொலை சம்பவங்களை தவிர்த்திருக்க முடியும் என்று மன்மோகன் சிங் கூறியிருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், 

மன்மோகன்சிங்கின் இந்த காலம் கடந்த கருத்து மிகுந்த மனவேதனை அளிக்கிறது. பழியை நரசிம்மராவ் மீது போட்டு ராஜீவ் காந்தியை காப்பாற்ற மன்மோகன்சிங் முயற்சிப்பதாக சாடினார். ராஜீவ் காந்தி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ராணுவத்தை அழைக்கும் முடிவு நிராகரிக்கப்பட்டதாகவும்,  பின்னர் வந்த அரசுக்குறிப்புகளில் இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ராணுவத்தை, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அழைத்திருந்தால் வரலாற்றின் மிகவும் மோசமான வன்முறைகளை தவிர்த்திருக்கலாம் என்று சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார்.

நரசிம்மராவ் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து வருத்தமளிப்பதாக, முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பேரனும், ஆந்திர பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான என்.வி. சுபாஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்