அஜித் பவாருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்து வைப்பு
மராட்டிய முன்னாள் துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
மும்பை,
மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது நீர்ப்பாசன துறையில் ரூ.70 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது, நீர்ப்பாசன துறை மந்திரியாக பதவி வகித்தவர் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார். இதனால், அஜித் பவார் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து மராட்டிய ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் இது குறித்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், மராட்டியத்தில் சமீபத்தில் பாஜகவுடன் கைகோர்த்த அஜித் பவார் துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். எனினும், பெரும்பான்மை இல்லாததால் 80 மணி நேரத்திற்குள் துணை முதல் மந்திரி பதவியை அஜித் பவாரும் முதல் மந்திரி பதவியை பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தனர். அஜித் பவார் துணை முதல் மந்திரியாக பதவி ஏற்றதும் அவருக்கு எதிரான நீர்ப்பாசன ஊழல் வழக்கு முடித்து வைக்கப்பட்டது என பரவலாக செய்திகள் வெளியாகின.
இந்த சூழலில், நீர்ப்பாசன திட்டங்களில் நடைபெற்ற ஊழலில் அஜித் பவாருக்கு தொடர்பில்லை என்று மராட்டிய ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் கடந்த 27 ஆம் தேதி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது தற்போது தெரியவந்துள்ளது. விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டு கழகத்தின் தலைவராக அஜித் பவார் இருந்திருந்தாலும், அதிகாரிகள் செய்த தவறுக்கு அஜித்பவார் பொறுப்பேற்க முடியாது. அவரது தரப்பில், சட்ட ரீதியாக எந்த தவறும் இல்லை. இதனால், வழக்குகள் முடித்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் சிவசேனா கூட்டணி ஆட்சி கடந்த 28 ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாக மேற்கூறிய பிரமாணப்பத்திரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.