சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காத பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காத பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காத பொன் மாணிக்கவேல் மீது தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு வரும் 9-ந் தேதி விசாரிக்கிறது.
ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய பதவி நீட்டிப்பு கடந்த நவம்பர் 30-ந் தேதியன்று முடிந்துவிட்ட நிலையில், அவர் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளின் ஆவணங்களை அந்தப் பிரிவு உயரதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது.
அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு, பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சிலை கடத்தல் பிரிவு வழக்கு தொடர்பான ஆவணங்களை அந்தப் பிரிவு உயரதிகாரியிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு திங்கட்கிழமையன்று உத்தரவு பிறப்பித்தனர்.
கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர், நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன் ஆஜரானார்.
அவர், “பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை உயரதிகாரிகளிடம் தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் இதுவரை அவர் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அவை அனைத்தும் கிரிமினல் வழக்கு தொடர்பான முக்கியமான ஆவணங்களாகும். அவருடைய பதவிகாலம் முடிந்துவிட்ட நிலையில் அவற்றை அவர் வைத்து இருப்பது சட்ட விரோதம். இதனால் அவர் கோர்ட்டு உத்தரவை மீறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று முறையிட்டார்.
9-ந் தேதி விசாரணை
இதற்கு இந்த வழக்கில் மனுதாரர் டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வக்கீல் ஜி.எஸ்.மணி, “சட்டவிதிகளின்படி பொன் மாணிக்கவேலுக்கு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய 30 நாட்கள் அவகாசம் இருக்கிறது; அவர் எந்த இடத்திலும் ஆவணங்களை ஒப்படைக்க மாட்டேன் என கூறவில்லை” என்றும் தெரிவித்தார். மேலும் தங்கள் தரப்பிலும் மறுஆய்வு மனுவும் தமிழக அரசின் மீது கோர்ட்டு அவமதிப்பு மனுவும் தாக்கல் செய்வதாகவும் கூறினார்.
அதையடுத்து நீதிபதிகள், “ தமிழக அரசின் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு உட்பட அனைத்து வழக்குகளும் வரும் 9-ந் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்தனர்.