ஹஜ் புனித பயணத்திற்கான அனைத்து நடைமுறைகளும் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளது -அப்பாஸ் நக்வி
ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கான அனைத்து செயல்முறைகளும் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளதாக அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மக்களைவையில் இன்று ஹஜ் புனித பயணத்திற்காக விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் அப்பாஸ் நக்வி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அந்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது;-
“2020 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக விண்ணப்பம் செய்யும் நடைமுறைகள் அனைத்தும் 100 சதவீதம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
இதில் ஆன்லைன் விண்ணப்பம், இ-விசா, ஹஜ் மொபைல் செயலி, பயணம் செய்பவர்களின் உடமைகள் குறித்த விவரங்களை பதிவு செய்தல், ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ உதவி முறைகள் மற்றும் ஹஜ் குழு அமைப்புகள் குறித்த தகவல்கள் உள்ளிட்டவை அனைத்தும் இணையதளம் மூலமாக நடைமுறைபடுத்தப்படும்.
இந்திய ஹஜ் பயணிகளின் நலனுக்காக இந்திய அரசாங்கம் இந்தியாவிலும், சவுதி அரேபியாவிலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹஜ் புனித பயணத்திற்கான நடைமுறைகளை கணினி மயமாக்குவதன் மூலம், இடைத்தரகர்களின் தேவையின்றி மக்கள் எளிமையாக விண்ணப்பிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.