3-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை; லாவகமாக பிடித்த பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ

3-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை லாவகமாக அங்கிருந்த பொதுமக்கள் பிடித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2019-12-03 21:45 GMT
டாமன்,

குஜராத் அருகில் உள்ள டாமன் யூனியன் பிரதேசம் காரிவாட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 2½ வயது குழந்தை ஜமால் 3-வது மாடியில் இருந்த வீட்டில் இருந்து கீழே தவறி விழுந்தது. ஆனால் 2-வது மாடியில் உள்ள வீட்டின் ஜன்னலில் அந்த குழந்தை சிக்கிக்கொண்டு சிறிது நேரம் தொங்கிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்து சிலர் அலறியதும் அந்த குடியிருப்பின் கீழே இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டனர்.

பலர் அங்கு திரண்டு அந்த குழந்தை கீழே விழும் வரை காத்திருந்தனர். சிறிது நேரத்தில் அந்த குழந்தை நழுவி கீழே விழுந்ததும் லாவகமாக அவர்கள் பிடித்துக்கொண்டனர். இதனால் அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தது. இதனால் அந்த குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த காட்சிகள் அங்குள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.



மேலும் செய்திகள்