இ-சிகரெட்டுகளைப் போல் சாதாரண சிகரெட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் - தொண்டு நிறுவனங்கள் அறிவிப்பு

இ-சிகரெட்டுகளைப் போல், சாதாரண சிகரெட்டுகளுக்கும் தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக போவதாக 2 தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Update: 2019-12-01 22:15 GMT
புதுடெல்லி,

எலெக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டை உற்பத்தி செய்தல், வினியோகித்தல், விற்பனை செய்தல், ஏற்றுமதி-இறக்குமதி செய்தல், விளம்பரம் செய்தல் ஆகியவற்றுக்கு தடை விதித்து மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. பின்னர், இதுதொடர்பான மசோதா, கடந்த புதன்கிழமை, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், சாதாரண சிகரெட்டுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்க தொடரப்போவதாக டெல்லியை சேர்ந்த உர்ஜா, ஐதராபாத்தை சேர்ந்த விசேஞ்ச்யூ ஆகிய 2 தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து விசேஞ்ச்யூ நிறுவனத்தின் தலைவர் விஜய் பாஸ்கர் யெடாபு கூறியதாவது:-

இ-சிகரெட்டுகளுக்கு தடை விதித்து இருப்பதால், அதன் அடிப்படையில், சாதாரண சிகரெட்டுகளுக்கும் தடை விதிக் கச் செய்ய புகையிலை எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

எனவே, இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும்போது, சாதாரண சிகரெட்டுகள் மற்றும் பீடிகளுக்கும் தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணை அணுகினோம். அவர் இந்த வழக்கை எடுத்து நடத்த சம்மதித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

உர்ஜா நிறுவனத்தின் தலைவர் அதுல் கோயல் கூறியதாவது:-

சிகரெட் விற்பனை மூலம் அரசுக்கு பெரும் வருமானம் கிடைக்கிறது. எனவே, புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி ஏற்படும் மரணங்களுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.

புகைப்பழக்கத்தால் மருத்துவ செலவை சந்திப்பவர்களுக்கும், சம்பாதிக்கும் நபரை இழக்கும் குடும்பத்துக்கும் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகையவர்களுக்கு உதவுவதற்காக, ரூ.3 லட்சம் கோடி கொண்ட தொகுப்பு நிதியத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்