மூத்த குடிமக்களுக்கு 1 கி.மீ. இலவச பயணம் அளிக்கும் ஆட்டோ ஓட்டுனர்
மராட்டியத்தில் மூத்த குடிமக்களுக்கு 1 கி.மீ. வரை ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் இலவச பயணம் அளிக்கிறார்.
புனே,
மராட்டியத்தின் மும்பை நகரில் வசித்து வருபவர் சத்யவான் கீதே. ஆட்டோ ஓட்டுனர். மற்ற ஆட்டோக்களை போல் இல்லாமல் தனது ஆட்டோவில் இவர் நவீன வசதிகளை செய்து வைத்து உள்ளார்.
அதில், மொபைல் போன் சார்ஜ் செய்வதற்கான வசதி, டெஸ்க்டாப் கணினி வசதி, சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்கான வாஷ் பேசின் தொட்டி மற்றும் சில்லென்ற குளிர் காற்று தரும் மின்விசிறி உள்ளிட்டவற்றை அமைத்து உள்ளார். உடற்பயிற்சிக்கு தேவையான ஆலோசனைகள் ஆகியவை கிடைக்கும் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.
வீட்டில் இருப்பது போன்ற வசதிகளை செய்துள்ள அவர், விமானத்தில் பயணிக்கும் அனுபவம் பெற்றிடுங்கள் என்றும் தனது ஆட்டோவின் பின்புறம் எழுதியுள்ளார். இதனால் பயணிகள் இவரது ஆட்டோவில் பயணம் செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, எனது ஆட்டோவில் உங்களது மொபைல் போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். தூய்மையான குடிநீர் உள்ளது. வாஷ் பேசினும் உள்ளது.
மூத்த குடிமக்கள் 1 கி.மீ. வரை பயணம் செய்வதற்கு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த வசதிகளை நான் செய்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.