மராட்டியத்தில் அரசு அமைப்பதில் மீண்டும் இழுபறி : சோனியா காந்தியை சந்திப்பதற்கு முன்னால் சரத்பவார் குழப்பமான பதில்

பாஜக-சிவசேனா அவர்கள், அவர்களின் வழியில் அரசியல் செய்யட்டும். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம் என சரத்பவார் கூறினார்.

Update: 2019-11-18 10:56 GMT
புதுடெல்லி,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. ஆனால் முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதாலும், அதற்கு பாரதீய ஜனதா மறுத்ததாலும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து, எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால், கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பாரதீய ஜனதாவுடன் மோதலை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஜனாதிபதி ஆட்சி அமலான பிறகு அந்த முயற்சியில் சிவசேனா தீவிரம் காட்டியது. இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனாவுடன் கைகோர்க்க முதலில் தயங்கிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், பின்னர் ஆட்சி அமைக்க சம்மதித்தன. இதற்காக மூன்று கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து பேசி கூட்டணி அரசில் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்தனர். அது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று,  கூட்டத்தொடரில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வருகை தந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவரிடம், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக சிவசேனா கூறி வருகிறது, அது எவ்வாறு செல்கிறது? என்று கேட்டனர். அதற்கு சரத் பவார் ஆச்சரியம் தெரிவிக்கும் வகையில், அப்படியா... பேச்சு நடத்துகிறார்களா? எனக் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக சரத் பவார் நிருபர்களிடம் கூறும் போது, 

தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா இணைந்து ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமா? தெரிந்துதான் கேட்கிறீர்களா? எனக் கேட்டார். அதற்கு நிருபர்கள், தேசியவாத காங்கிரசுடன் சிவசேனா பேச்சு நடத்துவது உண்மையில்லையா? என்று கேட்டனர். 

அதற்கு சரத் பவார், சிவசேனா-பாஜக இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள். தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் இணைந்து தேர்தலைச் சந்தித்தோம். அவர்கள், அவர்களின் வழியில் அரசியல் செய்யட்டும். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம் என்று தெரிவித்தார்.

சரத் பவாரிடம் நிருபர்கள், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்று சிவசேனா கூறி வருகிறார்களே? என்று மீண்டும் கேட்டனர். அதற்கு சரத் பவார் மிகவும் கிண்டலாக, அப்படியா? எனக் கேட்டவாறு அங்கிருந்து நகர்ந்து சென்றார். 

இந்நிலையில், சோனியா காந்தியை அவரின் வீட்டில் இன்று பிற்பகலில் சரத் பவார் சந்திக்கிறார். சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், சோனியா காந்தியும், சரத் பவாரும் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பல கட்டங்களாக ஆலோசித்தாலும், சிவசேனாவின் கொள்கைகள், சித்தாந்தங்கள், தீவிர இந்துத்துவா சிந்தனை போன்றவற்றால் நெருங்கிச் செல்ல தயக்கம் காட்டுகின்றார்கள்.

மேலும் குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்தாலும் அதை சிவசேனாவுடன் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறார்கள். மேலும், சிவசேனா தனது தீவிர இந்துத்துவா சிந்தனையைக் குறைத்துக் கொள்ள வேண்டும், மதசார்பற்ற நிலையை எடுக்க வேண்டும் என்றும் காங்கிஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், சிவசேனா அரசில் தேசியவாத காங்கிரசுக்கும் சம பங்கு அளிக்கவும் காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி அமையுமா?, பாதியிலேயே சிவசேனாவை இரு கட்சிகளும் சேர்ந்து கழற்றி விடுவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில், மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா, 'சிவசேனாவுடன் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்' என்றும், 'எல்லாம் சரியாகிவிடும்' என்றும் தனக்கு உறுதியளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று தெரிவித்து இருந்தார்.

மேலும் செய்திகள்