கூடங்குளம் அணுஉலை இணையத்தை ஹேக்கிங் செய்து தகவல்களை திருடியது வடகொரியா -அதிர்ச்சி தகவல்
கூடங்குளம் அணுஉலை இணையத்தில் ஹேக்கிங் மூலம் தகவல்களை திருடியது வடகொரியாதான் என தென்கொரியா அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி
கடந்த மாதம் கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் அதுகுறித்து அணுமின் நிலையம் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. அணுமின்நிலைய கட்டுப்பாட்டு அமைப்பில் எந்த சைபர் தாக்குதலுக்கும் சாத்தியமில்லை என கூறப்பட்டது.
அதற்கு கூடங்குளம் அணுமின் நிலைய கம்ப்யூட்டரில் தாக்குதல் நடைபெற்றது உண்மைதான் என இந்திய அணுமின் கழகம் கூறி இருந்தது.
கூடங்குளம் அணு உலை இணையத்தில் வடகொரியர்கள் ஹேக் செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கணினிகளில் இருந்து ஹேக்கிங் மூலம் தகவல்களை திருடியது வடகொரியாதான் என தென் கொரியா ஆதாரத்துடன் கூறியுள்ளது. இதுகுறித்து issue makers lab என்ற சைபர் கிரைம் பாதுகாப்பு அமைப்பு தொடர் ட்வீட்களை வெளியிட்டுள்ளது. இந்த திருட்டுக்கு பின்னால் தோரியம் குறித்த அணு மின் தகவல்களே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தோரியம் அணு ஆயுத தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி வகிக்கிறது. கடந்த ஆண்டு முதல் இந்த தோரியத்தை மூலப்பொருளாக கொண்டு மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை திருட வடகொரியா முயற்சித்து வந்துள்ளது. மேலும், கூடங்குளம் அணுமின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்திய நபர் வடகொரியாவில் தயாரிக்கப்பட்ட கணினியை பயன்படுத்தியுள்ளார். இந்த கணினிகள் வடகொரியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஹேக்கரின் ஐபி முகவரி வடகொரியா தலைநகர் பியாங்யாங்கிலிருந்து வருகிறது. ஹேக்கர் குரூப் பி என்ற வைரஸை வடகொரியா பயன்படுத்துகிறது. ஹேக் செய்யப்பட்ட கணினியிலிருந்து கோப்புகளை வைரஸ் கம்ப்ரஸ் செய்ய dkwero38oerA^t@# என்ற 16 இலக்க பாஸ்வேர்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டை கொண்டு கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. டி டிராக் வைரஸின் குறியீடை வடகொரியா ஹேக்கர்கள் பயன்படுத்தியது சரிபார்க்கப்பட்டது. இதே வைரஸ்தான் கடந்த 2016-ஆம் ஆண்டு தென் கொரியா ராணுவ நெட்வொர்க் தொடர்பான தகவல்களை திருட பயன்படுத்தப்பட்டது என அடுக்கடுக்கான ஆதாரங்களை தென் கொரியா முன்வைத்துள்ளது.