மராட்டிய சட்டமன்ற தேர்தல்; 2வது சுற்று முடிவில் முதல் மந்திரி பட்னாவிஸ் முன்னிலை

மராட்டிய சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 2வது சுற்று முடிவில் முதல் மந்திரி பட்னாவிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.

Update: 2019-10-24 05:27 GMT
நாக்பூர்,

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டிய மாநிலத்தில் கடந்த 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

மத்தியில் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்த பிறகு நடைபெறுகிற முதல் தேர்தல் என்கிற வகையில் இந்த தேர்தல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி-சிவசேனா கூட்டணி ஓரணியாகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன.

தேர்தல் களத்தில் ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் சேனா, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ், ஐதராபாத் எம்.பி. ஒவைசியின் எம்.ஐ.எம். உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே, மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மாநில காங்கிரஸ் தலைவர் பாலா சாகேப் தோரட், காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் பிரிதிவிராஜ் சவான், அசோக் சவான், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகிய நட்சத்திர வேட்பாளர்கள் உள்பட 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.  இந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின.

மராட்டிய சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது.  இதில், காலை 10.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 99 இடங்களிலும், சிவசேனா 60 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 48 இடங்களிலும் மற்றும் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மராட்டிய சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 2வது சுற்று முடிவில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியின் வேட்பாளர் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்