நஷ்டத்தில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்: பி.எஸ்.என்.எல்.-எம்.டி.என்.எல். இணைப்பு - மத்திய அரசு முடிவு

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2019-10-23 11:47 GMT
புதுடெல்லி,

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவை நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் தாமதம் நிலவுகிறது.

இதையடுத்து, இந்த நிறுவனங்களை இணைக்க மத்திய அரசு கொள்கை அளவில் முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டம் முடிவடைந்த பின்னர், மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத், இத்தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றை மறுசீரமைக்க மத்திய அரசு ரூ.29 ஆயிரத்து 937 கோடி ஒதுக்கும். இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக, இரு நிறுவனங்களும் இணைக்கப்படும். அப்படி இணைக்கப்படும்வரை, பி.எஸ்.என்.எல்.லின் துணை நிறுவனமாக எம்.டி.என்.எல். செயல்படும்.

மறுசீரமைப்பு திட்டத்தின்படி, ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புக்கு தங்க பத்திரம் வெளியிட்டு பணம் திரட்டப்படும். ரூ.38 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள், இன்னும் 4 ஆண்டுகளில் பணமாக்கப்படும். செலவை குறைப்பதற்காக, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் முன்வைக்கப்படும். ஆனால், இரு நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது. இந்த நிறுவனங்களுக்கு 4ஜி சேவைக்கான அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

2020-2021 சந்தை பருவத்தில், குறுவை சாகுபடி கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.85 உயர்த்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடுகு எண்ணெய் குறைந்தபட்ச ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்படுகிறது.

கடலை பருப்பின் விலை குவிண்டாலுக்கு ரூ.255-ம், குங்குமப்பூவின் விலை ரூ.270-ம், துவரம் பருப்பு விலை குவிண்டாலுக்கு ரூ.325-ம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்