நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடக்கிற மாநிலம் உத்தரபிரதேசம்: தமிழ்நாட்டுக்கு 7-வது இடம்

நாட்டிலேயே அதிக குற்ற சம்பவங்கள் நடக்கிற மாநிலமாக உத்தரபிர தேசம் உள்ளது. தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது.

Update: 2019-10-22 22:15 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 2017-ம் ஆண்டு நடந்துள்ள குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவர பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டில் நாடு முழுவதும் 30 லட்சத்து 62 ஆயிரத்து 579 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. 2016-ல் இந்த எண்ணிக்கை 29 லட்சத்து 75 ஆயிரத்து 711 ஆக இருந்தது. 2015-ம் ஆண்டு இது 29 லட்சத்து 49 ஆயிரத்து 400 ஆகும்.

நாட்டிலேயே பெரிய மாநிலம் என்ற சிறப்பை பெற்றுள்ள உத்தரபிரதேசம்தான், குற்றச்சம்பவங்களிலும் முதல் இடத்தில் உள்ளது.

இந்த மாநிலத்தில் 2017-ம் ஆண்டில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 84 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இது நாட்டில் 10.1 சதவீதம் ஆகும்.

இங்கு 2016-ம் ஆண்டில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 171 குற்ற வழக்குகளும், 2015-ம் ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரத்து 920 வழக்குகளும் பதிவாகின.

மராட்டிய மாநிலம், அதிக எண்ணிக்கையிலான குற்றச்சம்பவங்கள் நடந்துள்ள 2-வது மாநிலம் என்ற பெயரை பெறுகிறது. இங்கு 2017-ல் 2 லட்சத்து 88 ஆயிரத்து 879 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 9.4 சதவீதம் ஆகும்.

மத்திய பிரதேசத்துக்கு மூன்றாவது இடம். இந்த மாநிலத்தில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 512 குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது 8.8 சதவீதம் ஆகும்.

4-வது இடம், கேரள மாநிலத்துக்கும், 5-வது இடம் டெல்லிக்கும், 6-வது இடம் பீகாருக்கும் கிடைத்துள்ளது.

குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு 1 லட்சத்து 78 ஆயிரத்து 836 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 5.8 சதவீதம் ஆகும். 2016-ம் ஆண்டு, 1 லட்சத்து 79 ஆயிரத்து 896 குற்ற வழக்குகளும், 2015-ம் ஆண்டு, 1 லட்சத்து 87 ஆயிரத்து 558 குற்ற வழக்குகளும் பதிவாகி உள்ளன.

இந்த வகையில் தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மேலும் செய்திகள்