இறுதி ஆண்டு தேர்வு எழுத முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு புதிய நிபந்தனை
முதுகலை மருத்துவ மாணவர்கள், இறுதி ஆண்டு தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற மாவட்ட ஆஸ்பத்திரிகளில் 3 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளது.
புதுடெல்லி,
இந்திய மருத்துவ கவுன்சிலின் அதிகாரங்களுடன் செயல்படும் நிர்வாகிகள் குழு (போர்டு ஆப் கவர்னர்ஸ்) இந்த யோசனையை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.
அதில், அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்த நடைமுறையை அமல்படுத்துமாறும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டுமின்றி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.
இளங்கலை மருத்துவ மாணவர்கள், ஆரம்ப சுகாதார மையம் அல்லது நகர்ப்புற சுகாதார மையத்தில் 3 மாதங்கள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.