மத்திய பிரதேசத்தில் ஹேமா மாலினி எம்.பி.யின் கன்னம் போன்று சாலைகள் அழகாக்கப்படும்; மந்திரி சர்ச்சை பேச்சு
மத்திய பிரதேசத்தில் நடிகை மற்றும் எம்.பி.யான ஹேமா மாலினியின் கன்னம் போன்று சாலைகள் அழகாக்கப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் மந்திரி ஒருவர் பேசியுள்ளார்.
போபால்,
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது அமைச்சரவையில் சட்ட மந்திரியாக இருப்பவர் பி.சி. சர்மா. இவர் பொது பணி துறை மந்திரி சஜ்ஜன் வர்மா உடன் ஹபீப்கஞ்ச் ரெயில்வே நிலையம் அருகே சாலை ஆய்வு பணிக்காக சென்று உள்ளார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி நடந்தபொழுது, வாஷிங்டன் நகரை விட மேம்பட்ட சாலைகள் இங்குள்ளன என சவுகான் கூறினார். இந்த நிலையில், பி.சி. சர்மா கூறும்பொழுது, வாஷிங்டன் மற்றும் நியூயார்க் போன்று அமைக்கப்பட்ட சாலைகளுக்கு ஒரு மழையில் என்னவாகி விட்டது? என கேள்வி எழுப்பினார்.
அவர் தொடர்ந்து, சின்னம்மை வியாதி வந்ததுபோல் குண்டும் குழியுமுடன் இந்த சாலைகள் கைலாஷ் விஜய்வர்கியாவின் (பா.ஜ.க. பொது செயலாளர்) கன்னங்கள் போன்று காணப்படுகின்றன என கூறினார்.
முதல் மந்திரி கமல்நாத்ஜி உத்தரவின்பேரில் மற்றும் வர்மாஜி தலைமையில் சாலைகள் 15 நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அவை 15 முதல் 20 நாட்களில் ஹேமா மாலினியின் கன்னங்கள் போன்று சக்காசக் (அழகாக்கப்படும்) செய்யப்படும் என்றும் கூறினார்.
அரியானாவில் முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், சோனிபத் நகர் அருகே கர்கோடா என்ற இடத்தில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை செத்த எலி என பொருள்படும் வகையில் இந்தியில் பேசினார். அவரது இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரசார் வலியுறுத்தினர்.
இந்நிலையில், பா.ஜ.க.வின் எம்.பி.யான ஹேமா மாலினியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரி ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளார்.