கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி வீட்டில் ரூ.4.52 கோடி பறிமுதல் என தகவல்
கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் வீட்டில் ரூ.4.52 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தின. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்-மந்திரி யாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியா கவும் இருந்தனர். கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகு பா.ஜனதா ஆட்சி அமைத்தது. பா.ஜனதாவின் மூத்த தலைவரான எடியூரப்பா முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.
இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே நடந்த வருமான வரிசோதனை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமாரை அமலாக்கத் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான பரமேஸ்வர் வீடு அவரது உறவினர் வீடுகளில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மருத்துவ தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் பல கோடி வருமான வரி ஏய்ப்பு செய்த புகாரில் பெங்களூரு மற்றும் தும்கூர் போன்ற இடங்களில் பரமேஸ்வரின் சகோதரர் மகன் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் 300 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ரூ.4.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.