பி.எம்.சி வங்கி நிதி வைப்பாளர்களுக்காக ரிசர்வ் வங்கியின் கவர்னருடன் பேசுவதாக நிர்மலா சீதாராமன் உறுதி
பி.எம்.சி வங்கி நிதி வைப்பாளர்களுக்காக ரிசர்வ் வங்கியின் கவர்னருடன் பேசுவதாக நிர்மலா சீதாராமன் உறுதியளித்து உள்ளார்.
மும்பை
மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களுடன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியிடம் இருந்து பெற்ற சுமார் 6,500 கோடி ரூபாய் கடனை எச்.டி.ஐ.எல். நிறுவனம் மோசடி செய்து விட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்நிறுவனத்தின் தலைவரையும், அவரது மகனையும் கைது செய்தனர். இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பி.எம்.சி. வங்கி செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் அந்த வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்.களில் பணம் எடுக்க முடியாது என்ற கட்டுப்பாடு தான் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கோபம் அடைந்துள்ள பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர், மும்பை நாரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் வைப்புத் தொகையாளர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரிசர்வ் வங்கி கவர்னரிடம் மீண்டும் இந்த் விவகாரததை கூறுவதாக உறுதியளித்தார். பல மாநில கூட்டுறவு வங்கிகள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.