கிலோ ரூ.70 ஆக உயர்வு: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

வெங்காயம் விலை கிலோ ரூ.70 ஆக உயர்ந்தநிலையில், அதன் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை குறித்து பரிசீலித்து வருகிறது.

Update: 2019-09-22 23:00 GMT
புதுடெல்லி,

அன்றாட சமையலுக்கு வெங்காயம் அவசியமானது ஆகும். வெங்காயம் விலை, ஆட்சி மாற்றத்துக்கும் காரணமாக இருந்துள்ளது.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வெங்காயம் விலை, கடந்த சில வாரங்களாக அதிகரித்தபடியே உள்ளது. கடந்த வாரம், தலைநகர் டெல்லியில் கிலோ ரூ.57 ஆக வெங்காயம் விலை இருந்தது. சென்னை போன்ற மற்ற பகுதிகளில் கிலோ ரூ.40 ஆக இருந்தது.

ஆனால், இப்போது டெல்லியிலும், பிற பகுதிகளிலும் ரூ.70 மற்றும் ரூ.80 ஆக உயர்ந்து விட்டது. வரத்து குறைவே இதற்கு காரணம் ஆகும்.

வெங்காயம் அதிகமாக விளையும் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியபிரதேசம் ஆகிய பிராந்தியங்களில் கடந்த 2 நாட்களாக பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் அங்கிருந்து வெங்காய வரத்து குறைந்து விட்டது. இதனால் விலை திடீரென அதிக அளவில் உயர்ந்து விட்டது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் மீறி, இந்த விலை உயர்வு நிகழ்ந்துள்ளது.

குறிப்பாக, மத்திய அரசு, விலையை நிலைப்படுத்துவதற்காக, தனது இருப்பில் 56 ஆயிரம் டன் வெங்காயம் வைத்துள்ளது. அதில் இருந்து மாநிலங்கள் தங்களது தேவைக்கு வெங்காயத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

டெல்லி, திரிபுரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இதற்கு சம்மதித்துள்ளன. டெல்லி மாநிலம், தினந்தோறும் 200 டன் வெங்காயம் எடுத்து வருகிறது. மொத்தத்தில், மத்திய அரசின் இருப்பில் இருந்து இதுவரை 16 ஆயிரம் டன் வெங்காயம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வெங்காய ஏற்றுமதியை குறைக்கும் வகையில், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதற்கான ஊக்கத்தொகையை வாபஸ் பெற்றுள்ளது. கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது, வரத்து குறைவால் உயர்ந்துள்ள வெங்காய விலை, விரைவில் சீராகி விடும் என்று மத்திய அரசு கருதுகிறது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் சீராகாவிட்டால், வெங்காய வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு நிர்ணயிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கையாக இதை பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

வெங்காய வியாபாரிகளை பொறுத்தவரை, புதிதாக அறுவடை செய்யப்படும் வெங்காயம் நவம்பர் மாதத்தில் இருந்துதான் வரத்தொடங்கும் என்பதால், முந்தைய ஆண்டு கையிருப்பைத்தான், ஒவ்வொரு ஊருக்கும் அனுப்பி வருவதாக கூறுகிறார்கள்.

ஆனால், மழை பெய்து வருவதால், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால், வரத்து குறைந்து விலை அதிகரித்து இருப்பதாக மராட்டிய மாநில வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.50-க்கும், ஒரு மூடை(50 கிலோ) ரூ.2,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.65 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

மராட்டிய மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெங்காயம் விளைச்சல் செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டின் ஒட்டுமொத்த தேவையில் 80 சதவீதம் வெங்காயம் இங்கிருந்து தான் கொண்டு வரப்படுகிறது. அங்கு பெய்து வரும் மழை காரணமாக வரத்து குறைவாக இருப்பதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.

தற்போது ஒரு கிலோ ரூ.50-க்கு விற்கப்படுகிறது. மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.70 வரை செல்ல வாய்ப்பு உள்ளது. இன்னும் 3 மாதங்களுக்கு விலை குறைய வாய்ப்பு இல்லை. தீபாவளி நேரத்தில் ஒரு கிலோ ரூ.60 வரை செல்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்