மராட்டிய சட்டசபை தேர்தல்: பாதிக்கு பாதி இடம் இல்லை என்றால் கூட்டணி முறிவு பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாதிக்கு பாதி இடம் இல்லை என்றால் கூட்டணி உடைக்கக்கூடும் என சிவசேனா பாஜகவை எச்சரிக்கிறது.

Update: 2019-09-19 08:16 GMT
மும்பை

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வேண்டுமானலும் வெளியாக உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசும் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. இரு அணிகளும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில்  நேற்று மராட்டிய  அரசில் மந்திரியாக  இருக்கும் சிவசேனா தலைவர் ரோட்டே கூறும் போது பாஜகவால் சேனாவுக்கு சம எண்ணிக்கையிலான இடங்கள் வழங்கப்படாவிட்டால், சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான தேர்தலுக்கு முந்தைய கூட்டணி முறிந்து போகக்கூடும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து சிவசேனா தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவுத் இன்று கூறியதாவது:-

வரவிருக்கும் மராட்டிய சட்டசபை  தேர்தலில் போட்டியிட சிவசேனாவுக்கு சரி பாதி  இடங்களை வழங்கத் தவறினால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள  கட்சி கவலைப்படாது.

"அமித் ஷா மற்றும் மராட்டிய  முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் முடிவு செய்யப்பட்ட ஐம்பதுக்கு ஐம்பது என்ற பார்முலாவை பாஜக மதிக்க வேண்டும். நான் கூட்டணியை முறிப்பதைப் பற்றி பேசவில்லை, ஆனால் திவாகர் ரோட்டே கூறியது தவறல்ல என கூறினார்.

மேலும் செய்திகள்