1½ லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் - மத்திய அரசு நடவடிக்கை

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள 1½ லட்சம் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்க மத்திய அரசு நடவடிகை மேற்கொண்டுள்ளது.

Update: 2019-09-15 22:15 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் பல்வேறு கோர்ட்டுகளில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 882 கற்பழிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளில் விரைவில் தீர்வு காண்பதற்கு வசதியாக விரைவு கோர்ட்டுகளை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் தனது பரிந்துரையில் கூறி இருப்பதாவது:-

நாடு முழுவதும் 1,023 விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட வேண்டும்.

இவற்றில் 389 கோர்ட்டுகள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகளை (போக்சோ சட்டம்) மட்டுமே விசாரிக்க அமைக்கப்பட வேண்டும்.

மீதி 634 விரைவு கோர்ட்டுகள் கற்பழிப்பு வழக்குகள் அல்லது கற்பழிப்பு வழக்குகளுடன் போக்சோ சட்ட வழக்குகளையும் சேர்த்து விசாரிக்கலாம்.

ஒவ்வொரு விரைவு கோர்ட்டும் 3 மாதங்களுக்கு 41, 42 வழக்குகள் என்ற அளவில், ஆண்டுக்கு 165 வழக்குகளையாவது விசாரித்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விரைவு கோர்ட்டுகளை அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் 2-ந் தேதி தொடங்கும்.

1,023 விரைவு கோர்ட்டுகள் ரூ.767 கோடியே 25 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் ஓராண்டுக்கான உதவியாக மத்திய அரசு ரூ.474 கோடியை நிர்பயா நிதியில் இருந்து வழங்கும் என தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்