ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு உலகம் கூட விடைபெறும் நேரம் வந்துவிட்டது- பிரதமர் மோடி
ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு உலகம் கூட விடைபெறும் நேரம் வந்துவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
புதுடெல்லி
இந்தியாவின் சுற்றுச்சுழல் அழிவு, பாலைவனமாக்கலை எதிர்த்து ஐ.நா.சபையின் 14 -வது காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மற்றும் உயரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாடு நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பல்லுயிர் மற்றும் நிலம் இரண்டையும் பாதிக்கிறது. காலநிலை மாற்றத்தின் எதிர்மறையான தாக்கத்தை உலகம் எதிர்கொள்கிறது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
கடல் மட்ட உயர்வு மற்றும் அலை போக்கு, ஒழுங்கற்ற மழை மற்றும் புயல்கள் மற்றும் தட்ப வெப்பநிலையால் ஏற்படும் மணல் புயல்கள் காரணமாக காலநிலை மாற்றம் பல்வேறு வகையான நில சீரழிவுக்கு வழிவகுக்கிறது.
ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை இந்தியா வரும் ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டுவரும். ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கிற்கு உலகம் கூட விடைபெறும் நேரம் வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன்.
பூமியை புனிதமாக மதிக்கும் கலாச்சாரத்தை கொண்டவர்கள் நாம். பருவநிலை மாற்றங்களால் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
2015 - 2017க்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டின் வனப்பரப்பு 8 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. 2030-க்குள் காடுகளை மீட்டெடுக்கும் இலக்கை 26 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்துள்ளோம். 2015 முதல் 2017 வரை, இந்தியாவின் மரம் மற்றும் வனப்பகுதி 0.8 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.
காலநிலை மாற்றம், பல்லுயிர் மற்றும் நில சீரழிவு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அதிக ஒத்துழைப்புக்கான முன்முயற்சிகளை இந்தியா முன்வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் மோடி கூறினார்.