மும்பையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் பெட்டியை மோடி திறந்து வைத்தார்

மும்பையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.

Update: 2019-09-07 12:33 GMT
மும்பை,

மும்பையில் முதல் முறையாக ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்ட மெட்ரோ ரெயில் பெட்டியை பிரதமர் மோடி திறந்துவைத்தார். விழாவில் பேசிய மோடி ‘இஸ்ரோ விஞ்ஞானிகளின் தைரியத்தை வெகுவாக’ பாராட்டினார்.

மும்பையில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான பூமி பூஜை மற்றும் மெட்ரோ ரெயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வந்தார். இதற்காக பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்து நேற்று காலை தனி விமானத்தில் மும்பை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் பிரதமர் மோடி வில்லேபார்லேயில் உள்ள லோக்மான்ய சேவா சங் என்ற விநாயகர் மண்டலில் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள விடுதலை போராட்ட வீரர் லோக்மான்ய பாலகங்காதர திலகரின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ உலக மைய மாநாட்டு அரங்கத்தில், மும்பையில் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பில் 42 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படும் 3 புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் மும்பையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் வழித்தடங்களில் இயக்குவதற்காக பெங்களூருவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் 500 மெட்ரோ ரெயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது.

முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரெயில் பெட்டி மும்பை மெட்ரோ ரெயில் கழகத்திடம் வழங்கப்பட்டது. 75 நாட்களில் தயாரிக்கப்பட்ட அந்த மெட்ரோ ரெயில் பெட்டியை பிரதமர் நரேந்திர மோடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ‘இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஒரே ஒரு நாள் இரவு தங்கினேன். அவர்களின் தைரியத்தை கண்டு நான் மிகவும் வியந்தேன். அவர்களின் தைரியத்தில் இருந்து மக்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். சந்திரயான்-2 தரையிறங்குவதில் தடுமாற்றம் ஏற்பட்டாலும் நிலவை அடையும் இந்தியாவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் வரை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஓய்வு எடுக்க மாட்டார்கள்.’ என்றார்.

விழாவில் மெட்ரோ ரெயில் பெட்டி குறித்தும், பயணிகளுக்கான வசதிகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும கமிஷனர் ஆர்.ஏ.ராஜீவ் விளக்கம் அளித்தார். குறிப்பாக பயணிகள் தங்களது சைக்கிளுடன் பயணம் செய்யும் வசதி இந்த மெட்ரோ ரெயில் பெட்டியில் உருவாக்கப்பட்டு இருப்பது பற்றியும் எடுத்து கூறினார்.

பிரதமர் மோடி தனது மும்பை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவுரங்காபாத் புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்