மேற்கு வங்காள முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலையில் முன்னேற்றம்
மேற்கு வங்காள முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொல்கத்தா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்குவங்க முன்னாள் முதலமைச்சருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உடல் நலக்குறைபாட்டால் கொல்கத்தாவின் உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
75 வயதான அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். தகவல் அறிந்ததும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு நேரில் சென்று புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதே போன்று ஆளுநர் ஜக்தீப் தன்காரும் மருத்துவமனைக்கு சென்று புத்ததேவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளர் கவுசிக் பாசு கூறியதாவது:-
7 பேர் கொண்ட டாக்டர்கள் குழு புத்த தேவ் பட்டாச்சார்யா உடல் நிலையை கவனித்து வருகிறது. 75 வயதான பட்டாச்சார்யாவின் சுவாசம் மேம்பட்டுள்ளது மற்றும் 80/60 மிமீ வரை குறைந்துவிட்ட அவரது இரத்த அழுத்தம் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவிற்கு முன்னேறியுள்ளது. இரத்த சோகைக்கான சோதனை நடந்து வருகிறது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சிறிதளவு உணவை எடுத்து வருகிறார் என கூறினார்.