மும்பையில் கனமழை : 30 விமானங்கள் ரத்து -118 விமானங்கள் தாமதம்
மும்பையில் கனமழை காரணமாக 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 118 விமானங்கள் தாமதமாக சென்றன.
மும்பை
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை முதல் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மும்பை மாநகரம் தண்ணீரில் மிதந்து வருகிறது.
மும்பையில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் வடிந்து விட்ட நிலையிலும் வானிலை ஆய்வு மையத்தால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுபட்டு உள்ளதை கருத்தில் கொண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய பேரிடர் நிவாரணப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. குர்லா, பரேல் மற்றும் அந்தேரியில் தேசிய பேரிடர் நிவாரணப்படை தயார் நிலையில் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
தொடர் மழை காரணமாக சுமார் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் 118 விமானங்கள் இன்று தாமதமாக சென்றன, மும்பை வரும் 14 விமானங்கள் மற்றும் 16 வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மழை காரணமாக 20 விமானங்கள் வெளியேற்றப்பட்டன, அதே நேரத்தில் 300 விமானங்கள் தாமதமாக வந்தன.
புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8:30 மணி வரை 217.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த பருவத்தின் இரண்டாவது மிக உயர்ந்த மழை அளவாக 375 மிமீ பதிவாகி உள்ளது.
வியாழக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது, இது அதிகபட்ச மழைப்பொழிவை ஏற்படுத்தும். லேசான மழை எதிர்பார்க்கும் நிலையில், வெள்ளிக்கிழமை பச்சை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் (புரோ), சூரத் -மும்பை, மத்திய-மும்பை, மத்திய-சூரத் மற்றும் பாந்த்ரா டி-வாபி ஆகிய மூன்று ரயில்கள் நல்லசோபாராவில் கனமழை மற்றும் நீர் வெளியேற்றத்தால் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்து உள்ளது.
மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் இடைவிடாத மழை காரணமாக, ரயில் மற்றும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
பலத்த மழை காரணமாக மும்பையில் இருந்து வெளியேறும் விமானங்கள் தாமதமாகும் என ஏர் இந்தியா அறிவித்து உள்ளது. பயணிகள் ஏர் இந்தியா வலைத்தளம், மொபைல் ஆப் அல்லது வாடிக்கையாளர் சேவை மூலம் விமான நேரத்தை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என ஏர் இந்தியா அறிவித்து உள்ளது.