மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் உள்பட 4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு

மசூத் அசார், ஹபீஸ் சயீத், தாவூத் இப்ராகிம், ஜாகி உர் ரகுமான் லக்வி ஆகியோர் தனிநபர் பயங்கரவாதிகள் என்று புதிய சட்டத்தின்கீழ் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2019-09-04 10:39 GMT
புதுடெல்லி,

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்-1967, பயங்கரவாத செயல்களுக்காக ஒரு இயக்கத்தை தடை செய்வதற்கு வழி வகுக்கிறது. ஒரு இயக்கத்தை மட்டுமே பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க முடியும். அதில் உள்ள தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க முடியாதநிலை இருந்தது.

இந்த குறையைப் போக்க, அந்த சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இந்த திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மாதம் நிறைவேறியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்ததால், அச்சட்டம் அமலுக்கு வந்தது.

இதையடுத்து, அந்த புதிய சட்டத்தின்கீழ், ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத், மும்பை தாக்குதல் குற்றவாளி ஜாகி உர் ரகுமான் லக்வி, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் ஆகியோரை தனிநபர் பயங்கரவாதிகளாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.

புதிய சட்டப்படி, பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படும் முதலாவது நபர்கள் இவர்களே ஆவர் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

மேற்கண்ட 4 பேரும் செய்த குற்றங்கள் பட்டியலையும் உள்துறை அமைச்சகம் தனது அறிவிப்பாணையில் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2001-ம் ஆண்டு காஷ்மீர் சட்டசபை, அதே ஆண்டில் நாடாளுமன்றம், 2016-ம் ஆண்டு பதான்கோட் விமான தளம், 2017-ம் ஆண்டு ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு படை முகாம் ஆகியவற்றின் மீது நடந்த தாக்குதல்கள், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த புல்வாமா தாக்குதல் ஆகியவற்றில் மசூத் அசார் சம்பந்தப்பட்டுள்ளார்.

அவர் கடந்த மே மாதம், ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். டெல்லி பொடா கோர்ட்டால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். எனவே, பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர் என்பதால் மசூத் அசார் பயங்கரவாதியாக அறிவிக்கப்படுகிறார்.

ஹபீஸ் சயீத், 2000-ம் ஆண்டு டெல்லி செங்கோட்டை, உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள், 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல், 2017-ம் ஆண்டு உத்தம்பூரில் எல்லை பாதுகாப்பு படை வாகன அணிவகுப்பு மீதான தாக்குதல் ஆகியவற்றில் ஹபீஸ் சயீத் சம்பந்தப்பட்டவர்.

அவர் ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். ஆகவே, அவர் பயங்கரவாதியாக அறிவிக்கப்படுகிறார்.

லஷ்கர் இ தொய்பா தளபதியான லக்வி, செங்கோட்டை தாக்குதல், ராம்பூர் ரிசர்வ் போலீஸ் முகாம் தாக்குதல், மும்பை தாக்குதல் ஆகியவற்றில் சம்பந்தப்பட்டவர். அவரும் ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்.

தாவூத் இப்ராகிம், சர்வதேச நிழல் உலக குற்ற சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் ஆகியவற்றை தூண்டி வருகிறார். பயங்கரவாதத்துக்கு நிதிஉதவி, ஆயுத கடத்தல், கள்ள நோட்டு புழக்கத்தில் விடுதல், சட்டவிரோத பண பரிமாற்றம், போதைமருந்து, பணம் பறிப்பு, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பினாமி மூலம் ரியல் எஸ்டேட் வர்த்தகம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 1993-ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்தி, 257 பேர் பலியாக காரணமாக இருந்தார். ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். ஆகவே, அவர் பயங்கரவாதியாக அறிவிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்