மேதா பட்கர் 9 நாட்களாக உண்ணாவிரதம் - பிரதமர் தலையிட இந்திய கம்யூனிஸ்டு வேண்டுகோள்

மேதா பட்கர் 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2019-09-02 22:17 GMT
புதுடெல்லி,

குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் மதகுகளை மூடவும், அணையின் நீர்மட்டத்தை 138.68 மீட்டராக உயர்த்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அணை திட்டத்தால் வெளியேற்றப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் சமூக ஆர்வலர் மேதா பட்கர் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அவருக்கு ஆதரவாக பர்வானி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கிராமத்தினரும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் மேதா பட்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு, போராட்டக்காரர்களின் உயிரை காப்பாற்றுமாறு பிரதமர் மோடிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேண்டுகோள் விடுத்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் தலைவர்களில் ஒருவரான பினோய் விஸ்வம் எம்.பி., மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர், ‘சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் 192 கிராமங்களை சேர்ந்த 32 ஆயிரம் குடும்பங்களுக்கு ஆபத்து ஏற்படும். மக்களின் நல்வாழ்வுக்காகவே வளர்ச்சி திட்டங்கள் இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் வாழ்வை சீர்குலைப்பதற்காக இருக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டு உள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்க போராடும் அனைத்து இந்தியர்களுக்கும் மேதா பட்கரின் உயிர் விலைமதிப்பற்றது எனவும் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்