தெலுங்கானா கவர்னராக தமிழிசை நியமனம் ஜனாதிபதி அறிவிப்பு
தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜனை ஜனாதிபதி நியமித்து உள்ளார்.
புதுடெல்லி,
தமிழக பாரதீய ஜனதா தலைவராக பதவி வகித்து வந்தவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.
தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னர்
இவர் கடந்த 2014-ம் ஆண்டு இந்த பதவியில் நியமிக்கப்பட்டார். தமிழிசை சவுந்தரராஜனின் 4 ஆண்டு பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் மீண்டும் தலைவராக நியமிக் கப்பட்டார். இரண்டாவது முறையாக தலைவராக நியமிக்கப்பட்ட அவரது பதவி காலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது.
இந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.
தெலுங்கானா கவர்னராக இருந்து வந்த இ.எஸ்.எல்.நரசிம்மனின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தின் புதிய கவர்னராக தமிழிசை சவுந்தரராஜனை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டு இருக்கிறார்.
தெலுங்கானா மாநிலத் தில் முதல்-மந்திரி சந்திர சேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அரசியல் வாழ்க்கை
தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு 58 வயது ஆகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1961-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி பிறந்தார். இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் ஆவார். சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்த இவர், பின்னர் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் மகப்பேறு மருத்துவம் படித்தார். கனடாவில் மேல் படிப்பு படித்து உள்ளார். இவரது கணவர் சவுந்தர ராஜன் பிரபல சிறுநீரக மருத்துவ நிபுணர் ஆவார்.
பாரதீய ஜனதாவில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், 2013-ம் ஆண்டு அக்கட்சியின் தேசிய செயலாளர் ஆனார். 2014-ம் ஆண்டு தமிழக பாரதீய ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டார்.
தமிழிசை சவுந்தரராஜன் 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியிலும், 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வேளச்சேரி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை தொகுதியிலும், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
கேரளாவுக்கு புதிய கவர்னர்
இதேபோல் கேரளா, மராட்டியம், இமாசலபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கேரள மாநில கவர்னராக இருந்து வரும் பி.சதாசிவத்தின் 5 ஆண்டு பதவி காலம் முடிவடைய இருப்பதை தொடர்ந்து, அந்த மாநில கவர்னராக முன்னாள் மத்திய மந்திரி ஆரிப் முகமதுகான் (68) நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். ஜனதாதளம் கட்சி ஆட்சியின் போது சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரியாக இருந்தார்.
2004-ம் ஆண்டு பாரதீய ஜனதாவில் சேர்ந்த ஆரிப் முகமதுகான் உத்தரபிரதேச மாநிலம் கைசார்கஞ்ச் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சமீபத்தில் மோடி அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
மராட்டியம்
இதேபோல் மராட்டிய கவர்னராக இருந்து வந்த வித்யாசாகர் ராவின் பதவி காலமும் முடிவடைந்ததை தொடர்ந்து, அந்த மாநிலத்தின் புதிய கவர்னராக பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், உத்தரகாண்ட் முன்னாள் முதல்-மந்திரியுமான பகத்சிங் கோஷ்யாரி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். 77 வயதான இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து உள்ளார்.
முன்னாள் மத்திய மந்திரியான கல்ராஜ் மிஸ்ரா சமீபத்தில்தான் இமாசலபிரதேச கவர்னராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் அந்த மாநிலத்தில் இருந்து மாற்றப்பட்டு ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது ராஜஸ்தான் மாநில கவர்னராக இருந்து வரும் கல்யாண் சிங்கின் பதவி காலம் வருகிற 4-ந் தேதி முடிவடைய இருக்கிறது.
பண்டாரு தத்தாத்ரேயா
கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, இமாசலபிரதேச மாநிலத்தின் புதிய கவர்னராக முன்னாள் மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா (72) நியமிக்கப்பட்டு உள்ளார்.
புதிய கவர்னர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து அவர்களுடைய நியமனம் அமலுக்கு வரும் என்று ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.