தமிழகம், கர்நாடகா, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகம், கர்நாடகா மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஆறுகளில் உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால் கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் 6-வது நாளாக மழை நீடித்தது. குறிப்பாக மலப்புரம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழை வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 59 பேரை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழையால் 9க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 500க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து உள்ளனர்.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
நாளை முதல் வடமாநிலங்களில் மழை படிப்படியாக குறையும். அதேசமயம், தமிழகம், கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. அரபிக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல வட இந்திய மாநிலங்களில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆகஸ்ட் 20 வரை இதே நிலைமை தொடர வாய்ப்புள்ளது.