தமிழ், இந்தி பட அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு “காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த வாருங்கள்”

காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த வருமாறு தமிழ், இந்தி பட அதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.

Update: 2019-08-08 22:08 GMT
புதுடெல்லி,

தொலைகாட்சி மூலம் நேற்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகையில் பிரதமர் மோடி கூறியதாவது:-

சினிமா படப்பிடிப்பு

தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படத்துறையினருக்கு என் வேண்டுகோள். இனி எந்த தடையும் இன்றி காஷ்மீருக்கு வந்து நீங்கள் படப்பிடிப்பை மேற்கொள்ளுங்கள். இதனால் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். சுற்றுலாத்துறை பெருவளர்ச்சி அடையும்.

ஜம்மு-காஷ்மீர், லடாக் பிரதேசங்கள் பலவகையான மூலிகை பொருட்களுக்கு பெயர்போனது. இவற்றை அடையாளம் கண்டு பெருமளவில் பிரபலப்படுத்தினால் உலக சந்தையில் இப்பொருட்கள் இந்த பகுதிக்கு பெரும் வருவாயை ஈட்டித்தரும்.

இளைஞர்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். விளையாட்டு அரங்கம், பயிற்சி மையங்கள் ஆகியவை உருவாக்கப்படும்.

தொழில் தொடங்க வாய்ப்பு

தொழில் முனைவோர் இப்பகுதி இளைஞர்களின் வாழ்வில் நம்பிக்கை மற்றும் வளம் காணும் வகையில் புதிய தொழில்களை இனி தொடங்கலாம். அரசியல் சாசனத்தில் 370-வது பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் அதற்கான வாசல் கள் திறக்கப்பட்டு உள்ளன.

ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதியின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டில் உள்ள அனைவரின் அன்பும், ஆதரவும் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்