26 வயது மனைவிக்கு ‘முத்தலாக்’ கொடுத்த 60 வயது முதியவர்
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள தர்காவில் பணிபுரிந்து வருபவர் சலிமுதீன் (வயது 60). அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 26 வயது பெண்னை திருமணம் செய்து கொண்டார்.
அஜ்மீர்,
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள தர்காவில் பணிபுரிந்து வருபவர் சலிமுதீன் (வயது 60). அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 26 வயது பெண்னை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில், அவரது மனைவி அஜ்மீர் தர்கா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், கணவர் சலிமுதீன் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், மூன்று முறை ‘தலாக்’ (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்ததாகவும் கூறியிருந்தார். அதன்பேரில், சலிமுதீன் மீது ‘இந்திய தண்டனை சட்டம் 498ஏ’ (திருமணம் ஆன பெண்ணை துன்புறுத்துவது) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருமண ஆன ஒரு மாதகாலத்தில் இருந்தே சலிமுதீன் தனது மனைவியை கொடுமைப்படுத்தியது தெரியவந்ததாக சப்-இன்ஸ்பெக்டர் ஹேம்ராஜ் தெரிவித்தார். மேலும் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் சலிமுதீன் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து சட்ட ஆலோசனை கேட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
‘முத்தலாக்’ மூலம் விவாகரத்து கொடுப்பது குற்றம் என்று நாடாளுமன்றத்தில் சமீபத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.