காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: இந்தியாவின் உள்விவகாரம் என மாலத்தீவு கருத்து

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம் என மாலத்தீவு தெரிவித்துள்ளது.

Update: 2019-08-07 13:18 GMT
மாலே, 

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது.  காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில், ஐநா தலையிட வேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது.

காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்பதை ஏற்க மறுத்து வரும் பாகிஸ்தான் இதற்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை கோரப்போவதாக தெரிவித்து இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக துருக்கி, மலேசிய அதிபர்களிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசி இருந்தார்.

எனினும் இந்தியாவின் நடவடிக்கைக்கு இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. தற்போது மாலத்தீவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாலத்தீவு நாட்டின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்திய அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு தொடர்பாக இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம். இறையாண்மை உள்ள எந்த ஒரு நாட்டிற்கும் சட்டங்களை திருத்தவும், மாற்றவும் உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்