பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்; பா.ஜ.க. எம்.பி. கோரிக்கை

இந்தியாவின் உயரிய பாரத ரத்னா விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. கூறியுள்ளார்.

Update: 2019-08-06 01:47 GMT
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலை காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது.  ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். கல்லூரிகளில் இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் படை பலம் அதிகரிக்கப்பட்டது.

இதன்பின் நேற்று காலை 9.30 மணிக்கு  ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.  பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட இதர அமைச்சர்களும் பங்கேற்றனர்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற இரு அவைகளும் கூடியது.

இதில் பேசிய மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டபிரிவின் 370 வது சட்டபிரிவு ரத்து, காஷ்மீருக்கான 35 ஏ சட்ட பிரிவு ரத்து செய்யப்படுகிறது.  சிறப்பு பிரிவுகளை ரத்து செய்வது குறித்து மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

இதற்கான குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு உள்ளது என்றும்  அவர் கூறினார்.  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பாணையையும் மத்திய அரசு வெளியிட்டது.

காஷ்மீர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட தைரியமிக்க இந்த முடிவுக்காக மத்திய பிரதேசத்தின் ரட்லம் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. குமன் சிங் தமோர், பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார்.

அவர் மக்களவையின் பூஜ்ய நேரத்தில் பேசும்பொழுது, மோடிஜி ஒரு யுகபுருஷர்.  பல வெளிநாடுகள் அவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன.  அவர் எடுத்துள்ள முடிவால் கோடிக்கணக்கான இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என நான் கோரிக்கை வைக்கிறேன் என கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு ரஷ்ய கூட்டமைப்பின் உயரிய ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அபோசில் என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜாயீத் மெடல், பிலிப் கோட்லர் பிரசிடென்சியல் விருது மற்றும் 2018ம் ஆண்டுக்கான கவுரவ சியோல் அமைதி விருது ஆகியவையும் பிரதமருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்