பிரிவு 370 ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் செயல்படுவதற்குதான் வழிவகை செய்துள்ளது - அமித்ஷா
பிரிவு 370 ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் செயல்படுவதற்குதான் வழிவகை செய்துள்ளது என அமித்ஷா பதிலளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார். இதுதொடர்பாக விவாதம் காலையிலிருந்து நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சியின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள், கேள்விகளுக்கு அமித்ஷா பதிலளித்து பேசிவருகிறார். பிரிவு 370 ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் செயல்படுவதற்குதான் வழிவகை செய்துள்ளது எனக் குற்றம் சாட்டினார்.
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பயங்கரவாதம் இருந்து வருவதற்கு 370 பிரிவுதான் காரணம். மாநிலத்தில் வளர்ச்சியை பாதிக்கிறது. இது பெண்களுக்கு எதிரானது. மாநிலத்தில் வறுமை நிலவுவதற்கும் அதுதான் காரணம். மாநிலத்தில் சுற்றுலா, மருத்துவம், கல்வி மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படுவதற்கு சட்டப்பிரிவு 370 முக்கிய காரணமாகும். மத்திய அரசிடம் சுகாதாரத் திட்டம் உள்ளது. ஆனால் மருத்துவமனைகள் எங்கு உள்ளது? காஷ்மீரில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளார்களா? சட்டப்பிரிவு 35ஏ-க்கு ஆதரவு கொடுப்பவர்கள் பதிலளியுங்கள். நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் அங்கு சென்று பணிபுரிய முடியுமா? அவரால் அங்கு சொந்தமாக நிலமோ, வீடோ வாங்க முடியாது. அவருடைய குழந்தைகள் வாக்களிக்க முடியாது.
குலாம்நபி ஆசாத் இருமாநிலங்களுக்கு இடையே திருமணம் நடக்கிறது எனக் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பெண் ஒடிசாவை சேர்ந்தவரை திருமணம் செய்தால், அவருடைய குழந்தையோ, அவரோ ஜம்மு காஷ்மீரில் எந்தஒரு உரிமையையும் பெற முடியுமா? இருமாநிலத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதில் நீங்கள் திருப்தியை வெளிப்படுத்துகிறீர்கள், சட்டம் இல்லாமலும் அவர்கள் சுதந்திரமாக இருக்கட்டும். ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் உண்மையான உணர்வுடன் இருக்கட்டும். நீங்கள் நாடாளுமன்றத்தில் நின்றுக்கொண்டு காஷ்மீரில் இரத்தம் வடியும் என பேசுகிறீர்கள். நீங்கள் பள்ளத்தாக்கு பகுதிக்கு சொல்ல வரும் செய்திதான் என்ன? அவர்கள் இன்னும் 18-ம் நூற்றாண்டைய முறையிலே அங்குள்ள மக்கள் வாழவேண்டும் என விரும்புகிறீர்களா? அவர்கள் 21-ம் நூற்றாண்டில் வாழ வேண்டாமா? எனக் கேள்விகளை எழுப்பினார்.
பிரிவு 370 இல்லாமலே தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் காக்கின்றன எனக் குறிப்பிட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு அவையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளில் சில யூனியன் பிரதேசம் என அறிவிக்கப்பட்டதை எதிர்த்தன. இதற்கு பதிலளித்துள்ள அமித்ஷா, மாநிலத்தில் இயல்புநிலை திரும்பியதும் மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.