வெள்ளைக் கொடியுடன் வந்து உடலை எடுத்துச் செல்லுங்கள் இந்திய ராணுவத்தின் அறிவுரைக்கு பாகிஸ்தான் பதில்

எல்லையில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளின் உடல்களை வெள்ளைக்கொடியுடன் வந்து எடுத்துச் செல்லுங்கள் என்று இந்திய ராணுவம் வழங்கிய அறிவுரைக்கு பாகிஸ்தான் பதிலளித்துள்ளது.

Update: 2019-08-04 11:49 GMT


பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அவ்வப்போது அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் அதிரடியான பதில்களை கொடுத்து வருகிறது. சமீப காலமாக எல்லையில் பயங்கரவாதிகளை நுழைய செய்ய பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில் எல்லையில் கெரன் செக்டார் எல்லைப்பகுதிக்குள் பாகிஸ்தான் பார்டர் ஆக்ஷன் டீம் (பிஏடி) படையினர், பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அவர்களின் முயற்சியை தடுத்த இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் பாகிஸ்தான் ராணுவத்தினர், தீவிரவாதிகள் என 7 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் இந்திய எல்லைக்குள் இருக்கின்றன.

கொல்லப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்தவர்களின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய உடல்களை எடுத்துச்செல்லுமாறு இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.

உடல்களை எடுக்க வரும்போது, பாகிஸ்தான் ராணுவம் வெள்ளைக் கொடியுடன் வரவேண்டும் என இந்திய ராணுவம் அறிவுரை வழங்கியது. இதற்கு இப்போது பாகிஸ்தான் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ்தான் ராணுவம், வெற்று பிரசாரம், காஷ்மீரில் உள்ள நிலையில் இருந்து சர்வதேச நாடுகளை திசைதிருப்பும் முயற்சியாகும் எனக் கூறியுள்ளது. இதேபோன்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறையும், பாகிஸ்தான் ராணுவம் எல்லையை தாண்டியது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டையும், இந்திய எல்லைக்குள் எங்கள் படை வீரர்களின் சடலம் கிடைக்கிறது என்பதையும் நிராகரிக்கிறோம் எனக் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்