பிரதமர் மோடியிடம் இருந்து தைரியத்திற்கான தேசிய விருது பெற்றவர் சாலை விபத்தில் பலி

பிரதமர் மோடியிடம் இருந்து தைரியத்திற்கான தேசிய விருது பெற்றவர் சாலை விபத்தில் பலியானார்.

Update: 2019-08-03 09:33 GMT
ஒடிசாவை சேர்ந்தவர் சிட்டு மல்லிக் (வயது 16).  இவரது மாமா பினோத் மல்லிக்.  கடந்த வருடம் பிப்ரவரியில் இருவரும் கிராமத்தில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளனர்.  இந்நிலையில், பினோத் மல்லிக்கை குளத்தில் இருந்த முதலை ஒன்று பிடித்து நீருக்குள் இழுத்துள்ளது.

இதனை அருகில் இருந்த சிட்டு கவனித்து உடனடியாக தைரியமுடன் கீழே கிடந்த மூங்கில் குச்சி ஒன்றை எடுத்து முதலையின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார்.  அவரது இந்த திடீர் தாக்குதலால் பினோத் மீதிருந்த பிடியை விட்டு விட்டு முதலை நீருக்குள் திரும்பி சென்றது.  சிட்டுவின் இந்த தைரிய செயலை கவுரவிக்கும் வகையில் இந்திய குழந்தைகள் நல கவுன்சில் அவருக்கு தைரியத்திற்கான விருது வழங்கியது.

இதனை பிரதமர் மோடியிடம் இருந்து இந்த வருடம் சிட்டு பெற்று கொண்டார்.  இந்நிலையில், சிட்டு மற்றும் அவரது உறவினரான பாபு மல்லிக் ஆகிய இருவரும் கேந்திரபாரா மாவட்டத்தில் ராஜ்நகர் பகுதியில் ஜரிமுலா பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.  அவர்கள் மீது லாரி மோதியதில் இருவரும் பலியானார்கள்.

இந்த சம்பவத்திற்கு அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்த முதல் மந்திரி நவீன் பட்நாயக் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்