கர்நாடகாவில் கூட்டணி அரசுக்கு பின்னடைவு ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக சொன்ன காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீர் பல்டி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை வலியுறுத்த பா.ஜனதா திட்டம்

சமரச பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் ராஜினாமாவை வாபஸ் பெறமாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

Update: 2019-07-14 21:56 GMT
பெங்களூரு,

இதனால் கர்நாடக கூட்டணி அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று நடக்கும் சட்டசபை கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை வலியுறுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசு மீதான அதிருப்தியால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதே நேரத்தில் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான சங்கர், நாகேஷ் ஆகியோர் வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் கூட்டணி அரசின் பலம் 102 ஆக குறைந்துள்ளது. அதாவது சபாநாயகர், நியமன உறுப்பினரை தவிர்த்து கூட்டணி அரசின் பலம் 100 ஆகும்.

ஆனால் பா.ஜனதா கட்சியின் பலம் 105 ஆக உள்ளது. மேலும் அக்கட்சிக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்ட கூட்டணி அரசு கவிழும் நிலையில் உள்ளது.

இதற்கிடையில், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.டி.பி.நாகராஜை சமாதானப்படுத்தும் முயற்சியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா ஆகியோர் முன்னிலையில் நிருபர்களிடம் பேசிய எம்.டி.பி.நாகராஜ், தன்னுடைய ராஜினாமாவை வாபஸ் பெறுவதாகவும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகமாட்டேன் என்றும், அதிருப்தி எம்.எல்.ஏ.வான சுதாகரையும் சமாதானப்படுத்தி ராஜினாமாவை வாபஸ் பெற வைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறி இருந்தார். ஆனால் நேற்று காலையில் எம்.டி.பி.நாகராஜ் தனது முடிவில் இருந்து திடீரென்று பின் வாங்கினார்.

அதாவது, காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்துவிட்டு எம்.டி.பி.நாகராஜ் நேற்று காலையில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

மும்பை விமான நிலையத்தில் இருந்து அவரை காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி ஆகியோர் தாங்கள் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச்சென்றனர். இதையடுத்து, மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் நிருபர்களிடம் பேசிய நாகராஜ், ராஜினாமாவை வாபஸ் பெறும் கேள்விக்கே இடமில்லை என்று கூறினார். சுதாகர் எம்.எல்.ஏ. டெல்லிக்கு சென்றுள்ளார். ராஜினாமா செய்துள்ள ராமலிங்கரெட்டி, ரோஷன் பெய்க் ஆகிய 2 பேர் மட்டும் பெங்களூருவில் உள்ளனர். ஆனந்த்சிங் எம்.எல்.ஏ. கோவாவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. ஏற்கனவே கடந்த 12-ந் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தின் போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்திருந்தார்.

இதனால் இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 10 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூற உள்ளது. மறுநாள் (17-ந் தேதி) நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவு பிறப்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவோம் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்