ரெயில்வே துறையில் 2.94 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன மக்களவையில் பியூஸ் கோயல் தகவல்

ரெயில்வே துறையில் 2.94 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் மக்களவையில் தெரிவித்தார்.

Update: 2019-07-10 20:30 GMT
புதுடெல்லி, 

ரெயில்வே துறையில் 2.94 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் மக்களவையில் தெரிவித்தார்.

எழுத்துமூலம் பதில்

நாடாளுமன்ற மக்களவையில் ரெயில்வே துறை தொடர்பான கேள்விகளுக்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார். இதில் ரெயில்வே துறை காலிப்பணியிடங்கள் மற்றும் அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவரது எழுத்து மூல பதிலில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:-

வழக்கமான நடவடிக்கை

ரெயில்வேயில் காலியிடங்களை நிரப்புவது வழக்கமான நடவடிக்கைதான். பயிற்சியாளர் கையிருப்பு, விடுப்பு கையிருப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருததில் கொண்டு ரெயில்வேயின் ஊழியர் பலம் முடிவு செய்யப்படுகிறது.

கடந்த 1991-ம் ஆண்டு நிலவரப்படி ரெயில்வேயில் 16,54,985 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இது தற்போது 12,48,101 ஆக குறைந்து உள்ளது. எனினும் ரெயில்வே சேவையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

2.98 லட்சம் பணியிடங்கள்

சேவையும், தரமும் ஊழியர் பலத்தின் அடிப்படையில் மட்டும் அமைவது அல்ல. மாறாக தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி அமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையிலும் அமைகிறது. எனவே சேவையின் தரத்தினை ஊழியர்களின் பலத்தை வைத்து குறைசொல்வது தவறு.

கடந்த ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி ரெயில்வேயில் ஏ, பி, சி மற்றும் டி பிரிவுகளில் 2,98,574 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 2,94,420 இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதில் 1,51,843 இடங்களுக்கான தேர்வுகள் நடந்துள்ள நிலையில், 1,42,577 இடங்களுக்கான தேர்வு இனி நடைபெற உள்ளது. கடந்த 2018-19-ம் ஆண்டிலேயே தொடங்கிய இந்த நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.

தனியார் மயமாக்கல் இல்லை

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த பியூஸ் கோயல், ‘ரெயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை’ என தெரிவித்தார். இதைப்போல 2 ரெயில்களை தனியார் மூலம் இயக்குவதற்கான பரிந்துரை குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அப்படி தனியார் மூலம் இயக்குவதற்காக எந்த தனிப்பட்ட ரெயிலும் அடையாளம் காணப்படவில்லை எனக்கூறினார்.

அதேநேரம் தனியார் மூலம் இயக்குவதற்காக டெல்லி-லக்னோ இடையேயான தேஜஸ் ரெயில் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே பயணிகள் வசதிக்காக வருகிற அக்டோபர் மாதத்துக்குள் நாளொன்றுக்கு 4 லட்சம் படுக்கைகள் கூடுதலாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரெயில்வேத்துறை அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்