ரூ.70 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடிக்கு பின்னரும் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு

ரூ.70 ஆயிரம் கோடி கடனை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு தள்ளுபடி செய்த பின்னரும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2019-07-09 15:34 GMT
விவசாய நாடான இந்தியாவில், விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமலும், வாங்கிய கடன்களை திருப்பி கொடுக்க முடியாமலும் தற்கொலை என்ற பரிதாப முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் தற்கொலை நாடு முழுவதும் பரவலாக தொடர்கிறது. இது நாடாளுமன்ற மக்களவையில் எதிரொலித்தது. இதுதொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் புருசோத்தம் ரூபாலா பதில் அளிக்கையில், காங்கிரஸ் கூட்டணி அரசு 2008–ம் ஆண்டு ரூ.70 ஆயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது. ஆனாலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து உள்ளது என்றார். 
 
மெகா கடன் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில், விவசாயிகள் அல்லாதவர்களுக்கும் கடன் தள்ளுபடி செய்திருப்பது  தெரியவந்துள்ளது என்றார். விவசாயிகள் தற்கொலையை குறைப்பதற்காக தேசிய அளவில் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு விவசாயத்துறை கேபினட் மந்திரி நரேந்திர சிங் தோமர் பதில் அளிக்கையில், ‘‘விவசாயிகள் தற்கொலை செய்வது போன்ற பிரச்சினைகளுக்கு ஒரே நாளில் தீர்வு கண்டு விட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017–ம் ஆண்டு, ஜூலை 6–ந் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறி உள்ளது. இதற்கு ஏற்ற திட்டங்களை வகுப்பதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அட்டார்னி ஜெனரல் கூறியதை சுப்ரீம் கோர்ட்டு நியாயப்படுத்தியது’’ என கூறினார்.

 இந்த விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. விவசாயத்தை பொறுத்தமட்டில், மாநில அரசின் கீழ் வருவதால், அவைதான் அதற்கு ஏற்ற வகையில் முற்போக்கு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். திட்டங்களை செயல்படுத்துதை உறுதி செய்ய வேண்டும். உற்பத்தியை பெருக்குதல், குறைவான செலவில் சாகுபடி செய்தல், உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச்செய்தல் ஆகியவற்றில் கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்