புதிய காங்கிரஸ் தலைவரை நியமனம் செய்ய பரிந்துரைகளை வழங்க ராகுல் காந்தி குழு அமைக்க வேண்டும் -ஜனார்த்தன் திரிவேதி
புதிய காங்கிரஸ் தலைவரை நியமனம் செய்ய பரிந்துரைகளை வழங்க ராகுல் காந்தி குழு அமைக்க வேண்டும் என ஜனார்த்தன் திரிவேதி கூறியுள்ளார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களையே பெற்று படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித்தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். ராகுல் காந்தியின் ராஜினாமாவை திரும்ப பெற வைப்பதற்கு கட்சித்தலைமை மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகிப்போனது. அவர் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே பிற தலைவர்களின் ராஜினாமாவும் தொடர்கிறது. சமீபத்திய நிகழ்வாக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பதவி விலகினார். இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதற்கிடையே நீண்ட பாரம்பரியம் கொண்ட கட்சியான காங்கிரசுக்கு புதிய தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே இனி இளம் தலைவர் ஒருவரையே தலைவராக நியமிக்க வேண்டும் என கட்சியில் கோரிக்கை வலுத்து வருகிறது. அப்படியொரு வாய்ப்பு வந்தால், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் (வயது 41) மற்றும் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா (48) ஆகியோரில் ஒருவர் காங்கிரசின் தலைவராகும் வாய்ப்பு ஏற்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், புதிய காங்கிரஸ் தலைவரை நியமனம் செய்ய பரிந்துரைகளை வழங்க ராகுல் காந்தி குழுவை அமைக்க வேண்டும் என ஜனார்த்தன திரிவேதி கூறியுள்ளார். முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரிவேதி பேசுகையில், புதிய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முறைசாரா கலந்துரையாடல்களைவிட, அதிகாரப்பூர்வமாக ஆலோசனையை மேற்கொண்டால் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும். ராகுல் காந்தி குழுவை அமைத்து தொண்டர்கள், தலைவர்களுடன் ஆலோசனையை மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக காந்தி இன்னும் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.