காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மேம்பட்டுள்ளது, விமானப்படை பதிலடியை அடுத்து ஊடுருவல் குறைந்துள்ளது -மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மேம்பட்டுள்ளது, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களில் இந்திய விமானப்படைகள் தாக்குதல் நடத்திய பின்னர் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் 43 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறியுள்ளார்.

Update: 2019-07-09 09:53 GMT
மக்களவையில் மத்தியமைச்சர் நித்யானந்த் ராய் கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “பாதுகாப்புப் படையினரின்  ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக மாநிலத்தில் பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் இதே கால கட்டத்தில் இருந்த  நிலையைவிடவும் மேம்பட்டுள்ளது. எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் 43 சதவீதம் குறைந்துள்ளது,” எனக் கூறியுள்ளார். எல்லை தாண்டிய ஊடுருவலை சகித்துக்கொள்ளாத வகையில் ஸ்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14-ம் தேதி இந்திய பாதுகாப்பு படையை குறிவைத்து புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்திய ராணுவம் எல்லையை தாண்டி சென்று பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்துள்ளது.

மேலும் செய்திகள்