உலகின் எந்த மூலையிலும் விசாரணை நடத்தும் வகையில் தேசிய புலனாய்வு முகமைக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
உலகின் எந்த மூலையிலும் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் பற்றி விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமைக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
மும்பை தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக, கடந்த 2009-ம் ஆண்டு, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைக்கப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை சட்டப்படி இது உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், என்.ஐ.ஏ.வை மேலும் வலுப்படுத்துவதற்காக, தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
இந்த மசோதாவை மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியர்களுக்கும், அவர்களின் நலன்களுக்கும் எதிராக உலகின் எந்த மூலையில் தாக்குதல் நடந்தாலும் அதுகுறித்து விசாரணை நடத்த என்.ஐ.ஏ.வுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. மேலும், இணையவழி குற்றங்கள், ஆள் கடத்தல் போன்றவற்றையும் என்.ஐ.ஏ. விசாரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், முஸ்லிம் லீக் உறுப்பினர் குஞ்சாலி குட்டி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பயங்கரவாத தொடர்பு உள்ள தனிநபரை ‘பயங்கரவாதி’ என முத்திரை குத்துவதற்கான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட திருத்த மசோதாவையும் மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி மக்களவையில் தாக்கல் செய்தார்.
இம்மசோதா, தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவும், அவசர கதியில் கொண்டுவரப்படுவதாகவும் புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி உறுப்பினர் பிரேம சந்திரன், காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசு குடியிருப்புகளில் உரிய காலத்துக்கு பிறகும் குடியிருப்பவர்களை வெளியேற்ற வகைசெய்யும் மசோதாவை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி மக்களவையில் தாக்கல் செய்தார்.
உரிய காலத்துக்கு பிறகும் தங்கி இருப்பவர்களை சுமுகமாக வெளியேற்றிவிட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வரிசைப்படி குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார்.
ஜாலியன்வாலாபாக் நினைவிடத்தை பராமரிக்கும் அறக்கட்டளையில் இருந்து காங்கிரஸ் தலைவரை நீக்குவதற்கான மசோதாவை மத்திய கலாசாரத்துறை மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த அறக்கட்டளையை அரசியல் சார்பற்றதாக ஆக்குவதற்காக இம்மசோதா கொண்டுவரப்படுவதாக அவர் கூறினார்.
ஆனால், மசோதாவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
நுகர்வோர் உரிமைகளை வலுப்படுத்துவதற்கான நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மக்களவையில் தாக்கல் செய்தார்.
பல் மருத்துவ கவுன்சிலில் அனைத்து மாநிலங்களும், பல்கலைக்கழகங்களும் இடம்பெறுவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.
இதற்கிடையே ஆதார் மற்றும் பிற சட்டங்கள் (திருத்தம்) மசோதா மாநிலங்களவையில் குரல் ஓட்டு மூலம் நேற்று நிறைவேறியது. எனினும் காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
முன்னதாக, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்யும் நடைமுறைகளை மாற்ற வகை செய்யும் ‘மனித உரிமை பாதுகாப்பு (திருத்தம்) மசோதாவை’ மக்களவையில் உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி தாக்கல் செய்தார்.