2024-ம் ஆண்டுக்குள் வீடுதோறும் குழாய் வழி குடிநீர் - மத்திய அரசு இலக்கு

2024-ம் ஆண்டுக்குள் வீடு தோறும் குழாய் வழி குடிநீர் வினியோகம் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

Update: 2019-07-05 08:13 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர், ‘‘வாடகை வீடு திட்டத்தை மேம்படுத்துவதற்கு பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என கூறினார்.

தற்போதைய வீட்டு வாடகை சட்டங்கள் பழமையானவை என்பதால் தற்போது அவை வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையேயான உறவை தத்ரூபமாக, சரியாக கூறுவதாக இல்லை என்பதால் மாதிரி வாடகைச்சட்டம் இறுதி செய்யப்பட்டு, மாநிலங்களுக்கு சுழற்சியில் விடப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் நீர் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதுகாப்பான அணுகலை வழங்கவும், அனைத்து இந்தியர்களுக்கும் போதுமான குடிநீரை வழங்கவும் அரசு முன்னுரிமை கொண்டுள்ளது. அந்த நோக்கில் மிக முக்கிய நடவடிக்கை, ஜல்சக்தி துறையை உருவாக்கியது ஆகும். ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான முறையில் நீர் வளங்களை பாதுகாக்கவும், குடிநீர் வினியோகத்தை மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த வகையில் 2024-ம் ஆண்டுக்குள் ஜல்ஜீவன் மி‌ஷன் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் வழியாக குடிநீர் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா நகர்ப்புற திட்டத்தின்கீழ் ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் கோடி மதிப்பில் 81 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டும் திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது; இதில் 47 லட்சம் வீடுகள் கட்டுமானப்பணி தொடங்கி உள்ளது; 26 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, 24 லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டி முடிக்கப்பட்டுள்ளன என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஜ்வாலா யோஜனா மற்றும் சவுபாக்யா யோஜனா திட்டங்கள் கிராமப்புற குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

‘‘7 கோடி குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100 சதவீத கிராமங்களுக்கு மின்வசதி வழங்கப்பட்டுள்ளது. 2022–ம் ஆண்டு நாடு 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடுகிறபோது யார் எல்லாம் விரும்பவில்லையோ அவர்கள் தவிர்த்து அனைவருக்கும் மின்சார வசதியும், சமையல் கியாஸ் இணைப்புகளும் வழங்கப்பட்டு விடும்’’ என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்