காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடரவே நாங்கள் வலியுறுத்துவோம் - மோதிலால் வோரா
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடரவே நாங்கள் வலியுறுத்துவோம் என மோதிலால் வோரா கூறியுள்ளார்.
2019 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா என்ற முடிவில் ராகுல் ஸ்திரமாக உள்ளார். ஆனால் அவரே தலைமை பொறுப்பை தொடர வேண்டும் என கட்சியின் தொண்டர்களும், தலைவர்களும் வலியுறுத்துகிறார்கள். இதற்கிடையே 90 வயதான மோதிலால் வோரா காங்கிரஸ் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் அவர் தரப்பில் தனக்கு எந்த ஒரு தகவலும் தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டது. மோதிலால் வோரா மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்தவர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்கும் வரையில் அவரே தலைவராக தொடர்வார் என கட்சியின் உயர்மட்ட தகவல் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் டுவிட்டரில் செய்தி வெளியிட்டது.
மேலும், அதுபோல் மோதிலால் வோரா இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து மோதிலால் வோரா பேசுகையில், காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்றே நாங்கள் ராகுல் காந்தியை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துவோம் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் போது எங்களுடைய வலியுறுத்தலை முன்வைப்போம் எனக் கூறியுள்ளார்.